October 19, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்குத் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி தொகுதிகளில் கண்காணிப்புக்காகப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆறு பறக்கும் படைகளும், மூன்று நிலையான குழுக்களும், மூன்று விடியோ கண்காணிப்புக் குழுக்களும் தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளன.
பணப்பட்டுவாடா புகார் அதிகம் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணிக்காக 6 பறக்கும் படைகள், 6 நிலையான குழுக்கள், 3 விடியோ கண்காணிப்புக் குழுக்கள், ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு, செலவினக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
“வாக்களிக்க பணமோ, பொருளோ கொடுப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாகப் பணம் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறைக்குத் தகவல் அளிக்கப்படும்” என தெரிவித்தனர்.
மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் மட்டுமே தேர்தலுக்குச் செலவு செய்ய முடியும். வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாகப் பணம் எடுப்பது, பணம் செலுத்துவது போன்ற பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பணம் அல்லது ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களைக் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.