December 23, 2016 தண்டோரா குழு
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவைச் சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு, இந்த அணுகுமுறை ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கருத்து தெரிவித்தார்.
பா.ஜ.க. இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் முரளிதரராவ் கூறியதாவது:
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் ஏன் வருமானவரித் துறைச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? வருமானவரித் துறைச் சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்புப் பணத்தை ஆதரிப்பவர்களா?
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சசிகலாவைச் சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு. இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு ஆதரவாகத்தான் செயல்ப்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டார். அதனால், வேறு எதுவும் கூறுவதற்கில்லை.
இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.