October 27, 2017 தண்டோரா குழு
மெர்சல் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் மனுதாரரை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல்’. இப்படத்திற்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில் தற்போது “மெர்சல் படத்தை தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் பணமே இல்லை என படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது” என்று ஒருவர் பொதுநல வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது மெர்சல் திரைப்படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அஸ்வத்தாமன், மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிப்பதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் பணம் இல்லை என நகைச்சுவை நடிகர் பேசுவதாகவும் கூறினார். மேலும், மருத்துவம் குறித்து தவறான தகவல்கள் மெர்சல் படத்தில் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணமதிப்பிழப்பை விமர்சித்த எதிர்கட்சி தலைவர், அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர்.பொதுநலனில் அக்கறை இருந்தால் குடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை கோரலாமே என கூறிய நீதிபதிகள், மெர்சல் வெறும் திரைப்படம் மட்டுமே நிஜ வாழ்க்கை இல்லையே எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் “கருத்து சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. இதில் மெர்சல் என்பது படம் மட்டுமே. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு நீங்கள் அப்படத்தில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள்?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் வழக்கினை தள்ளுபடி செய்துள்ளார்.