September 22, 2016 தண்டோரா குழு
தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் அயல் நாட்டு பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சினிமா உலகின் சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கபட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு விசாரணை, சாய்ரத், உட்தாபஞ்சாப் உட்பட 29 படங்கள் தேர்வு செய்யபட்டு அதில் விசாரணை படம் சிறந்தாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் அயல்நாட்டு பிரிவுக்கு , இந்தியா சார்பாக அனுப்பப்பட இருக்கிறது.
தனுஷின் வண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம், கோவையை சேர்ந்த ஆட்டோ சந்திரன் எழுதிய லாக் அப் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். விசாரணைக் கைதிகளுக்கு ஏற்படும் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாக வெற்றிமாறன், அந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார்.
இப்படத்தில் சமுத்திரகனி அட்டகதி தினேஷ், ஆனந்தி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் 72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்டு விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.