June 18, 2016 தண்டோரா குழு
இனிப்புகளில் அனைவரும் விரும்பி உண்பது கேக் தான். பிறந்த நாள், திருமணம், குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சி, திருமண நாள் கொண்டாட்டம் போன்ற கொண்டாட்டங்களில் கேக் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
விதவிதமான வடிவங்களில் மற்றும் சுவைகளில் மக்கள் மனதைக் கவர்கின்றனர். இங்கிலாந்தில் பிரபல கேக் வடிவமைப்பாளர் ஒருவர் அணிந்து கொள்ளவே முடியாத வித்தியாசமான திருமண ஆடை ஒன்றை வடிவமைத்து உள்ளார்.
இங்கிலாந்தில் திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்கு கேக் தயாரித்து வழங்கி விருதுகள் பல பெற்றவர் சில்வியா எல்பா.
இவர் தற்போது வடிவமைத்துள்ள திருமண ஆடை வடிவிலான கேக் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சில்வியா எல்பா தமது சிறப்பு குழுவினருடன் இணைந்து சுமார் 300 மணி நேரம் செலவிட்டு இந்த 70 கிலோ எடையைக் கொண்ட திருமண ஆடை கேக்கினை வடிவமைத்துள்ளார்.
170 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்தத் திருமண உடை கேக்கில் சில்வியா வடிவமைத்து உள்ள நுணுக்கங்கள் பார்வையாளர்களை கண்டிப்பாக அதுபோன்ற ஒரு ஆடையைச் சொந்தமாக்க தூண்டும் என்பது அதன் சிறப்பு அம்சமாகும்.
மேலும், இந்தச் சிறப்பு கேக்கானது லண்டன் மாநகரில் நடை பெறவிருக்கும் இரண்டு நாள் சர்வதேச கேக் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக சில்வியா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.