June 9, 2016
தண்டோரா குழு
கண் ஆயினும் சரி, கைகளாயினும் சரி, உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல, மன உறுதியுடன் செயல் பட்டால் வானத்தையும் வில்லாக வளைக்கலாம் என்பதை இன்றைய மாணவர்கள் நடத்திக் காட்டுகின்றனர்.
முசஃபர் நகரைச் சேர்ந்தவர் ஹலீமா என்ற மாணவி. பிறவியிலேயே இருக்கைகளையும் இழந்தவர். இந்தியாவின் பிரபலமான நோயான வறுமை இவரையும் விட்டு வைக்கவில்லை. இவரது சகோதரர் சொற்பவருவாய் ஈட்டும் ஒரு சாதாரணத் தொழிலாளி. இவரது வருவாயில் குடும்பத்தைப் பட்டினியில் இருந்து காப்பாற்றுவதே மிகப் பெரிய விஷயம். அவ்வாறிருக்கச் சகோதரியின் படிப்புச் செலவிற்கு பணம் ஒதுக்குவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத ஒன்று.
ஹலீமா தனது அன்றாட அலுவல்களையும், படிப்பு சம்பந்தமான எழுத்துவேலை போன்றவற்றையும் தனது இரு கால்கள் மற்றும் கால் விரல்களை உபயோகித்தே செய்வார்.
தன்னுடைய கடினமான உழைப்பினால் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர விரும்பினார். கல்லூரிக்குக் கட்ட பணம் இல்லாத காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் இவருக்கு LLB யில் சேர்வதற்கு அனுமதி மறுத்துள்ளது. பின்பு ஹலீமாவின் விடாமுயற்சியையும், படிப்பில் அவரது ஆர்வத்தையும் கண்டு கல்லூரி நிர்வாகம் ஹலீமாவைச் சேர அனுமதித்துள்ளது. எவ்வாறேனும் முயன்று ஒரு நீதிபதி ஆகிவிடவேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.
இவரது தன்நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கண்ட கிராம மக்கள் இவரை ஒரு ஆதர்சமாணவியாக பெருமைப் படுத்தித் தங்களது வாரிசுகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டி வருகின்றனர்.
காசர்பா கிராமத்தில் சாஹ்பூர் காவல் நிலையத்தின் அருகில் வசிக்கும் ஹலீமாவின் தாயார் கூறுகையில், தனது மகள் மிகுந்த உழைப்பாளி, மற்றும் எடுத்த காரியம் முடிக்கும் வரை ஓயமாட்டார் என்று பெருமை படக்கூறியுள்ளார். தங்களால் இயன்ற உதவியை அவருக்குச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போல் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் முஸ்தஃவா என்ற மாணவன் தன் PUC தேர்வைக் கால் விரல்களால் எழுதி 80 விழுக்காடுகள் எடுத்தது மற்றொரு சான்று. இம்மாணவன் தனது லட்சியம் ஒரு IAS அதிகாரியாகி நாட்டிற்குத் தொண்டு செய்வது என்று கூறியுள்ளார்.
இவையெல்லாவற்றிக்கும் மேலாக ஐம்புலன்களில் மிக முக்கியமான கண்ணை இழந்து இருட்டையே ஸ்பரிசிக்கும் நிலையிலும் மன உறுதி குன்றாமல் 10ம் வகுப்பில் 82.4 விழுக்காடுகள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற பூனே மாணவனின் லட்சியமும் IAS அதிகாரி ஆவதே.
எனவே முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு இது போன்ற சிலரே சாட்சியாக உள்ளனர்.