June 9, 2016
தண்டோரா குழு
இந்த 21ம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கையின் பலனாக வெளிறிய நிறமுடைய மக்கள் அனுபவிக்கும் கொடுமை கற்பனைக்கும் எட்டாதது.
மனிதர்கள் பல நிறங்களைக் கொண்டவர்கள். மிகக் கறுப்பானவர்கள், மிக வெளுப்பானவர்கள், இடைப்பட்டவர்கள், மஞ்ஞள் நிறமுடையவர்கள் போன்ற பலவகையினர் உள்ளனர். ஆனால் வெளிறிய நிறமுடைய மக்கள் மிகுதியாகக் காணப்படுவது ஆப்பிரிக்காவின் மாலாவினா, டான்சேனியா, மொசாம்பிக்யுக் போன்ற பகுதிகளிலாகும். இம் மனிதர்களின் கண்களும், இமைகளும், உடலும், தலைமுடியும் கூட வெளிறிய நிறத்துடன் காணப்படும்.
இவர்களை ஆல்பினோஸ் என்று அழைப்பர். இது உடலின் நிறத்தைக் கணிக்கும் திசுக்களின் விகித மாற்றத்தினால் ஏற்படுவது. இது பரம்பரையாக வரும் உடல் நிறம். மற்ற இடங்களில் ஆங்காங்கே காணப்பட்டாலும் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கவாசிகள்.
ஆப்பிரிக்க மக்களில் பலர் மிகப் பழமை வாய்ந்தவர்கள், கண்மூடித்தனமான மூடநம்பிக்கை கொண்டவர்கள், மிகப்பின் தங்கியவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்.
இவர்களுடைய மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்னவென்றால் இந்நிற மக்களின் எலும்புகளில் தங்கம் உள்ளது என்றும், நம்ப இயலாத மருத்துவ குணங்கள் பொருந்தியது என்றும், இவ்வினப் பெண்களிடம் உறவு வைத்துக்கொண்டால் பாலியல் நோய்க்குத் தீர்வு காணலாம் என்றும் நம்பப்படுவதே.
இதன் காரணமாகப் பல பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதும், பல குழந்தைகளும், பெரியோர்களும் கொடூரமான முறையில் விலங்குகள் போல் கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன.
அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு மதச்சடங்கிற்காக இந்நிற மனிதனின் முழு உடலின் பாகங்கள் 75,000 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இம் மனிதர்களைப் பலியிடுவதின் மூலம் தங்களுக்கு அதிர்ஷ்டமும், வசீகரமும் கிட்டும் என்ற மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக்கித் தாங்கள் பிழைக்கும் வண்ணம் இவர்களைக் கொல்வதைத் தொழிலாகக் கொண்டவர்கள் பலர் தற்போதும் உள்ளனர்.
அம்னிசஸ்டி இன்டர்நேஷனல் இச்செயலைப் பலமுறை வெளிக் கொணர்ந்துள்ளது. காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வின மக்களைச் சரிவர பாதுகாக்கத் தவறுகிறது, இது இப்படியே நீடித்தால் இந்த நிற மக்கள் முழுவதும் அழிந்து விடுவர் என்றும் எச்சரித்துள்ளது.
இன்டர் நேஷனல் ரெட் கிராஸ் அமைப்பும் இந்நிகழ்வுகளைக் விமரிசித்தும், காவல்துறையின் மெத்தனத்தைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இவர்களைக் கடத்துபவர்களையும், கொலைசெய்பவர்களையும், கொடுமைப் படுத்துபவர்களையும் கண்டவுடன்சுடக் காவல்துறை அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க மக்களின் பிற்போக்கு சிந்தனையும், அறியாமையும், வறுமையும், பணத்தாசையுமே அவர்கள் செயலுக்குக் காரணம் என்று இக்போன்வோசா என்ற இங்கிலாந்து ஆல்பினோ பெண்மணி தனது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்.
இவர்களின் நிறத்தின் காரணமாக இறந்த பின்பு கூட நிம்மதி கிடைப்பதில்லை, ஏனெனில் இறந்த சடலத்தைத் தோண்டி எடுத்து விற்பனை செய்து விடுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.