January 31, 2017 தண்டோரா குழு
ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி.,யின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழுவிவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் தாக்கல் செய்தார்.
ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது; “பழைய ரூபாய் 5௦௦,1௦௦௦ வாபஸ் நடவடிக்கையால் 2016-17 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.10 சதவிதமாக இருக்கும். வரும் 2017 – 2018 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் உயரும். இது 6.75% முதல் 7.50 சதவிதத்திற்குள் இருக்கும்.
உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும். பழைய ரூபாய் 500,1000 வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி யின் (நாடு முழுவதும் ஒரே சேவை வரி ) பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது , சிறிது காலம் ஆகும்.
நடப்பு ஆண்டிற்கான ஜி.டி.பி., வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். தொழிலாளர், வரி தொடர்பான சீர்திருத்தங்களை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி, தோல் தொழில் துறைகளில் உலக அளவில் இந்தியா போட்டியிட முடியும்.
வேளாண் துறையில் 2015 – 2016 நிதியாண்டில் 1.2 சதவீதம் இருந்த வருமானம் 2016-17ல் 4.1% வளர்ச்சி காணும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2016-17ன் முதல் பாதியில் 0.3%ஆக குறைந்ததுள்ளது , 2016-17ல் தொழில்துறை வளர்ச்சி 5.2%ஆக குறையும்.”
இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.