May 14, 2019 தண்டோரா குழு
சர்வதேச நடுவர்கள் பேனலில் முதல் பெண் அம்பயராக, 51 வயதான இந்தியாவைச் சேர்ந்த ஜி எஸ் லட்சுமியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை. எதிரெணி வீரர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். வார்த்தை வசைப்பாடல்களுடன், அடிதடி சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதை தடுக்க முயலும் நடுவர்களையும், வீரர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள். அதேசமயம் நடுவரின் முடிவுகளையும் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள். ‘நோ-பால்’ சர்ச்சை, ‘அகல பந்து’ சர்ச்சை, ‘எல்.பி.டபிள்யூ’ மற்றும் ‘டிப்-கேட்ச்’ முறையில் ‘அவுட்’ கொடுத்ததில் சர்ச்சை… என ஆண் நடுவர்களுக்கே, பெரும் சவாலாக இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இப்போது பெண் நடுவர்களும் களமிறங்க உள்ளனர்.
துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐசிசி சர்வதேச நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நடுவர்கள் குழுவில் கள நடுவர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரிக்கள் இடம்பெற்றிருப்பர். சர்வதேச போட்டித்தொடர்களில் இந்த நடுவர் குழுவில் இடம்பெற்றிருக்கும் நடுவர்களே பணியாற்றுவர். இந்நிலையில், ஆண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த ஐசிசி நடுவர் குழுவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவரான G.S.லக்ஷ்மியும் (வயது 51) மேட்ச் ரெஃப்ரியாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் இனி பெண் நடுவர்களும் பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது அலுவலர்களிடையே ஆண் – பெண் பேதம் பார்ப்பதில்லை, இருப்பினும் அனைத்து நியமனங்களும் தகுதியின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என ஐசிசியின் மூத்த மேலாளர் அட்ரியன் கிரிஃபித் கூறியுள்ளார்.2008-09 காலகட்டத்தில் 3 மகளிர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் லக்ஷ்மி நடுவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.