December 8, 2018
தண்டோரா குழு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்கில் 235 ரன்களில் சுருண்டது.
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் தொடக்க வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், புஜாரா நிலைத்து நின்று 123 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இறுதியில், 235 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சில் பெற்ற 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் முரளி விஜய் 18, ராகுல் 44 ரன்கள் எடுத்தனர். கோஹ்லி 34 ரன்கள் எடுத்தார். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து, 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா (40), ரகானே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.