March 5, 2019 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி சதமடித்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று (மார்ச் 5) நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சு தேர்வு செய்தார். தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி – தவான் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். 29 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த தவானை மேக்ஸ்வெல் வீழ்த்தினார்.
பின்னர் வந்த அம்பதி ராயுடு 18 ரன்கள் எடுத்து நாதன் லியோன் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆனார். அப்போது களமிறங்கிய விஜய் சங்கர், கேப்டன் கோலியுடன் சேர்ந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 46 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். இவரை தொடர்ந்து களமிறங்கிய தோனி டக் அவுட் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி ஜடேஜா நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்ந்தினர். இதில் சிறப்பாக விளையாடிய கோலி, தனது 40 வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கோலி 116 ரன்கள் எடுத்தார். 251 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.