February 25, 2017
தண்டோரா குழு
புனேவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்ச ஒ கெபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து 298 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிக பட்சமாக கேப்டன் ஸ்மித் 109 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
441 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் அசத்தல் சுழலில் சுருண்டது. துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் சொர்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த கோலி (13), ரகானே (18), அஷ்வின் (8), சகா (3), புஜாரா (31), ரவிந்திர ஜடேஜா (3) என ஒ கெபி சுழலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர்.
இதையடுத்து இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி, 1-0 என முன்னிலை பெற்றது.