June 25, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தான் இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பகீர் கிளப்பம் தகவலை தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. இதில்,பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 16 அன்று, மான்செஸ்டரில் நடந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி யடைந்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள்,அந்த அணிக்கு எதிராக கொந்தளித்தனர். பலர் வெளிப்படையாக அணியின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர். இதுமட்டுமின்றி, இந்த தோல்வியானது பாகிஸ்தான், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் வகையில் அமைந்தது.
இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்,
‘கடந்த ஞாயிற்றுக் கிழமை, போட்டி முடிந்ததைத் தொடர்ந்து நான் தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன். உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எல்லாம் வேகமாக நடக்கும். ஓரிரு போட்டிகளில் நீங்கள் தோற்றால், உங்கள் மீது ஊடகங்கள் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துவிடும். உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும். அப்படிப்பட்ட அழுத்தத்தினால்தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. சில நேரங்களில் எல்லோருக்கும் அதைப் போன்ற எண்ணம் வந்து போகும்’ என்று பேசினார்.
பாகிஸ்தான், தாங்கள் அடுத்த விளையாட உள்ள அனைத்துப் போட்டிகளிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். அடுத்ததாக அவர்கள் பிர்மிங்ஹாமில் நியூசியாந்தை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.