November 22, 2019
தண்டோரா குழு
இந்தியாவுக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களில் சுருண்டது
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா அணி விளையாடும் பகல்/இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று துவங்கியது. வெளிநாடு களில் பகல்/இரவு டெஸ்ட் போட்டி நடத்தியிருந்தாலும் இந்தியாவில் முதல் முறை என்பதால் போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிசிசிஐ தலைவரும், பகல்/இரவு டெஸ்ட் நடக்க காரணமான சவுரவ் கங்குலி உள்ளிட்ட நிர்வாகிகள், கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இந்த போட்டியை காண வந்துள்ளனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்குள் ஆல் ஆவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.