August 13, 2019 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளவர் ரவி சாஸ்திரி. இவரது பதவிக்காலம் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரவி சாஸ்திரியுடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலுக்கான 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை முன்னாள் கேப்டன் கபில் தேவ், அனுஸ்மான் கேக்வாத், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்யதுள்ளனர். சுமார் 2000 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ள இந்த பொறுப்புக்கு, மைக் ஹசன், டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், பில் சிம்மன்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோரை தேர்வு செய்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் இந் திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட, ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனினும் சிலர் டாம் மூடி, மைக் ஹசன் ஆகியோருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கள் நிலவுகிறது.
ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி, இரண்டு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.