February 29, 2020 தண்டோரா குழு
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் 16 வயதான இளம் புயல் ஷஃபாலி வெர்மா.
இவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதியில் நடைபெற்ற கண்காட்சிப்போட்டியில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதன் முதலாக, செப்டம்பர் 24, 2019ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தை தொடங்கிய வெர்மா, நவம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 5 டி20 போட்டியை சேர்த்து 158 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை அலங்கரித்தார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அரைசதத்தை பதிவு செய்த வெர்மா, இந்தியாவுக்காக குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். இளம் வீராங்கனை வெர்மாவுக்கு முதல் உலகக்கோப்பை தொடர் இதுவாகும். உலகக்கோப்பையில் விளையாடுபவர்களோ அனுபவம் உடையவர்கள். வெர்மாவின் உலகக்கோப்பை பயணம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு சற்றும் சளைக்காமல் தனது பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பதிலாக விளாசினார்.
முதல் லீக் ஆட்டமே 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன். சளைக்காமல் 15 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29ரன்களை சேர்த்தார். வங்கதேச அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தியதோடு, ஆட்டநாயகி விருதையும் வென்றார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது லீக் ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களின் கவனம் முழுவதும் ஷஃபாலி மீதே இருந்தது. இருப்பினும், பந்துவீச்சாளர்கள் கண்ணில் மண்ணை தூவிய ஷஃபாலி, 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 46ரன்கள் சேர்த்து, 2வது முறையாக ஆட்டநாயகி விருதை வென்றதோடு, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறவும் முக்கிய வீராங்கனையாக இருந்தார்.
இலங்கைக்கு எதிரான 4வது லீக் ஆட்டத்திலும் வெர்மாவின் ருத்ரதாண்டவம் தொடர்ந்தது. பவுண்டரிகளை நோக்கி பந்தை விரட்டிய வெர்மா இதில் 47ரன்கள் எடுத்தார். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடியுள்ள ஷஃபாலி 161 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். பேட்டிங்-ல் பிடித்தது சச்சின், விக்கெட் கீப்பிங்-ல் பிடித்தது தோனி என கூறியிருக்கும் ஷஃபாலி, இந்திய மகளிர் அணியின் சேவாக பார்க்கப்படுகிறார். மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட வாகை சூடியதில்லை. இந்த முறை லேடி சேவாக் வருகையும், அதிரடியும் இந்த வரலாற்றை மாற்றி எழுதுமா? வெர்மா மூலம் இந்தியாவிற்கு உலகக்கோப்பை கிடைக்குமா? காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.