January 11, 2019
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இந்தியில் புகழ்பெற்ற தனியார் தொலைகாட்யின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர். அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், “காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய யாரையும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். நிகழ்ச்சியின் தன்மையை நினைவில் கொண்டே நான் பேசினேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இதற்கு அவர்கள் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வேளையில் பிசிசிஐயின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் இவர்கள் இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதனிடையே நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் விசாரணை நடத்திய பிறகு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.