July 1, 2017
tamilsamayam.com
விண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் தொடர், ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. இந்த தொடரின் 3வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நடைப்பெற்றது.
இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தவான் 2, கோலி 11 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால் மறுபுறம் ரஹானே மிக பொறுமையாக விளையாடினார்.
யுவராஜ் சிங் 39 ரன்னில் அவுட்டாக, தோனி களமிறங்கினார். தோனியும், ரஹானேவும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்துவந்த நிலையில், ரஹானே 72 ரன்னில் அவுட்டானார். 42.2 ஓவரில் 170 ரன் மட்டும் எடுத்திருந்தது.
பின்னர் தோனி, கேதார் ஜாதவ் இணை அதிரடியாக விளையாடியதில் இந்திய அணி 50 ஓவரில் 251 ரன்களை குவித்தனர். தோனி 78, ஜாதவ் 20 பந்தில் 40 ரன்கள் எடுத்தனர்.
தடுமாறிய விண்டீஸ்:
இரண்டாவதாக களமிறங்கிய விண்டீஸ் அணி ரன் எடுக்க திணறியதோடு, விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜெசன் முஹமத் 40, ரோவ்மன் பவல் 30 ரன்களை எடுத்தனர்.
இந்தியாவின் சுழல்களான அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 2, உமேஷ் யாதவ், கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து விண்டீஸ் அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டும் எடுத்தது. இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியா முன்னிலை:
இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3போட்டிகள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. முதல் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.