December 21, 2018
தண்டோரா குழு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த மாதம் (நவம்பர்) 30-ம் தேதியுடன் முடிந்தது. கடந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மிதாலி ராஜ் நீக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அவரது ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நீட்டிக்கவில்லை. இதையடுத்து, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த 28 பேரில் 10 பேருக்கு நேற்று (20.12.18) மும்பையில் நேர்காணல் நடந்தப்பட்டது.
நேர்காணலின் முடிவில் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டன், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான டபிள்யு.வி.ராமன், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய 3 பேரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்குமாறு தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். இறுதியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யு.வி.ராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 1983 முதல் 1999 வரை இந்தியா அணிக்காக விளையாடியவர். டபிள்யு.வி.ராமன், 11 டெஸ்ட், 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தமிழகம், மேற்கு வங்கம் போன்ற பல ரஞ்சி அணிகளுக்கும் பயிற்சியளித்துள்ளார்.