April 17, 2017
tamilsamayam.com
இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் கிராண்ட் ப்ரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூவர் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தோனேஷியா நாட்டின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, சர்வதேச ஜூனியர் கிராண்ட் ப்ரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூன்று பேர் ஒரே நாளில் பதக்கம் வென்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளராக இருந்த கோபிசந்தின் மகள் காயத்ரி கோபிசந்த் மற்றொரு இந்திய வீராங்கனையான சாமியா இமாதை எதிர்த்து ஆடினார். 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-11, 18-21, 21-16 என காய்த்ரி கோபிசந்த் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் எதிர் எதிராக மோதிய, சாமியா – காயத்ரி ஆகியோர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இணைந்து ஆடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். அவர்கள் இந்தோனேஷிய வீராங்கனைகள் கெல்லி – ஷிலாண்ட்ரி இணையை வீழ்த்தி தங்கத்தை தமதாக்கினர்.
இது மட்டுமின்றி, இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியாவின் கவிப்ரியா – மேகனா ரெட்டி இணை வென்றது.
இதன் மூலம் ஒரே நாளில் இந்தியாவின் இளம் வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை பறைசாற்றியுள்ளனர்.
இன்று நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி – சாய் ப்ரனீத் ஆகியோர் மோதினர். இதில், சாய் ப்ரனீ வெற்றி பெற்று முதல் முறையாக சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.