October 9, 2017
tamilsamayam.com
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 10 விக்கெட் கைப்பற்றிய ரபாடா, குறைந்த வயதில் 100 டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, முதலில் 2 டெஸ்டில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, புலோஎம்பான்டெனில் நடந்தது.
இதில் தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 573 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாளோ ஆன் பெற்றது.
பின் இரண்டாவது இன்னிங்சை தொடந்த வங்கதேச அணி,172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க அணி, ஒரு இன்னிங்ஸ் 254 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இப்போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்காவின் ரபாடா 5 விக்கெட் கைப்பற்றி மொத்தமாக இப்போட்டியில் 10 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார்.
இதுவரை 22 டெஸ்டில் இவர் 102 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்ரிக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
குறைந்த வயதில் 100 டெஸ்ட் விக்கெட் கைப்பற்றிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முதலிடத்தில் உள்ளார்.