April 1, 2019 தண்டோரா குழு
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் 20-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது.அதைபோல் இந்திய அணியும் கடந்த சில மாதங்களாக உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது. வீரர்களை மாற்றி பரிசோதனை நடத்தியது. சமீபத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். அதிகபட்சம் ஒன்றிரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கும் என கூறியிருந்தார்.இந்நிலையில் ஏப்ரல் 20-ந்தேதிக்குள் இந்திய அணியில் இடம்பிடிக்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில்,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். அனைத்து வீரர்களை பற்றி புரிந்து வைத்துள்ளோம். சிறந்த காம்பினேசன் குறித்து பரிசோதனை செய்துள்ளோம். நாங்கள் அறிவிக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியை வருகிற 20-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறோம். நாங்கள் சிறந்த அணியை அறிவிப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.