July 10, 2019 தண்டோரா குழு
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரைஇறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணியக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோஸ் டெய்லர் 74(90) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியை காத்திருந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா,மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தலா ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் மூன்றாவதாக வந்த விராட் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காததால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டை இழந்தது.
அதன்பின் தோனி மற்றும் ஜடேஜா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். ஆனால், கடைசி நிமிடத்தில் ஜடேஜா 77 ரன்கள் எடுத்து அவுட் ஆக, தோனி மீது அனைவரின் நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனதால், இந்தியாவின் வெற்றி பறிபோனது. இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹென்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.