January 28, 2020 தண்டோரா குழு
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நடப்பாண்டு 13வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஐபிஎல் போட்டி நேரங்களை மாற்றுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரவு ஆட்டம் வழக்கம் போல் 8 மணிக்கே போட்டி தொடங்கும். 5 நாள்கள் மட்டுமே இரண்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். 6 போட்டிகள் மட்டுமே மாலை 4 மணிக்குத் தொடங்கும் மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்குத் தொடங்கும்.
அதேபோல், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியான நிலையில், மும்பையில்தான் நடைபெறும் என கங்குலி அறிவித்தார். தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்றுவீரரை களமிறக்கும் முறை அறிமுகபடுத்தப்படும். நோபால் முறையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றும் கூறினார்.