January 11, 2022 தண்டோரா குழு
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சராகி உள்ளது டாடா குழுமம். இதனை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் விவோ நிறுவனம், 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலுமான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமையை வாங்கியது.
இதற்கிடையில், இந்திய – சீன வீரர்களுக்கிடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விவோவுக்கு பதிலாக ட்ரீம் 11 ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
இந்நிலையில்,சீன நிறுவனமான விவோ வசமிருந்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டாடா குழுமத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் விவோ ஸ்பான்சர்ஷிப் எஞ்சியுள்ள நிலையில் டாடா குழுமத்திடம் தற்போது அது கைமாற்றப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 என இரண்டு சீசன்களிலும் டாடா டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ‘டாடா ஐபிஎல்’ என புரொமோஷன் செய்யப்படும் என தெரிகிறது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் ஐபில் 2022 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.