December 18, 2018
தண்டோரா குழு
2019 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர் யுவராஜ் சிங்கை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஐ.பி.எல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லிக் டி-20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த போட்டி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது. ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து, 2019 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா உள்பட 13 நாடுகளை சேர்ந்த 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இந்த ஏலத்தில், இந்திய வீரர்கள் மனோஜ் திவாரியும், புஜாராவும் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹனுமா விஹாரியை போட்டி போட்டு எடுத்தனர். அவரின் ஆரம்ப விலை 50 லட்சமாக இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு நல்ல மவுசு கிடைத்துள்ளது. ஷிம்ரான் ஹெட்மயரை ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணியும், கார்லோஸ் பிராத்வெயிட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணியும் வாங்கியது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர் யுவ்ராஜ் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஒரு கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட இந்திய வீரர் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.