March 29, 2019 தண்டோரா குழு
கடைசி பந்தை நோ-பால் என்று அறிவிக்காதது கேலிக் குரியது என பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில்பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை மட்டுமே எடுத்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. களத்தில் டிவில்லியர்ஸ், துபே இருந்தனர். அந்த ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்தில் துபே சிக்சர் அடித்தார். அடுத்து 4 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது.பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், ரன் எதுவும் எடுக்காததால் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரீபிளேவில் பார்த்த போது மலிங்கா வீசியது நோ – பால் என்று தெரியவந்தது.அவர் கீரிசை விட்டு சில இன்ச் காலை வைத்து பந்தை வீசி இருந்தார். ஆனால் அதை நடுவர் கவனிக்க தவறி விட்டார்.நடுவர் நோ-பாலை கவனித்து இருந்தால் ஒரு ரன் மற்றும் பிரீ-ஹிட் பெங்களூர் அணிக்கு கிடைத்து இருக்கும். இதனால் ஆட்டத்தின் முடிவும் மாறி இருக்கலாம்.
இதனால் பெங்களூர் கேப்டன் விராட்கோலி மற்றும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் மைதானத்தில் ஒருவித ஆவேசத்துடன் நின்று இருந்தனர். பின்பு கோலி நடுவர்களிடம் சென்று பேசினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தோல்வி குறித்து கோலி ஆதங்கத்துடன் பேட்டி அளித்தார்.
அப்போது, நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறோம். கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. கடைசி பந்தை நோ-பால் என்று அறிவிக்காதது கேலிக் குரியது.நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். கடைசி பந்தை கிரீசை விட்டு சில இன்ச்சுகள் தள்ளி காலை வைத்து வீசப்பட்டுள்ளது. இது ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டது. அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.