May 27, 2019 தண்டோரா குழு
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டகாரருமான சனத் ஜெயசூர்யா கனடா சென்ற போது கார் விபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது.
இது குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவிய செய்தி இது தான் “கனடா சென்ற ஜெயசூர்யா கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்தச் செய்தியைப் பார்த்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், “ஜெயசூர்யா மரணமடைந்துவிட்டாரா? வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஆனால் ட்விட்டரில் இது சம்மந்தமாக ஒன்றுமே வெளியாகவில்லையே“ என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். பின்னர் அஸ்வினுக்கு ஒருவர் அது வதந்தி என பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயசூர்யாவும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘‘எனது உடல் ஆரோக்கியம் குறித்து சில வலைத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. கார் விபத்தில் நான் இறந்து விட்டதாக கூறப்படும் செய்தியை புறக்கணியுங்கள். நான் கனடாவுக்கு செல்லவில்லை. இலங்கையில்தான் இருக்கிறேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.