May 18, 2019 தண்டோரா குழு
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டதை தொடர்ந்து உலகக் கோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவின் பெயரும் இடம்பெற்றது. இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவிற்கு போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் அவரின் தோள்பட்டை காயம் குணமடைந்துவிட்டதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் அவர் உலககோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.