June 19, 2019 தண்டோரா குழு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்திற்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய அணியுடன் சதமடித்து அசத்திய தவான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்போட்டியில் தவான் 117 ரன்கள் எடுத்து இருந்தார்.இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஃபீல்டிங் செய்வதிலிருந்து விலகி டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில், இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள் தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு விளையாடக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், 3 வார கட்டாய ஓய்வு காரணமாக தவான் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.