May 6, 2017
tamilsamayam.com
சூரிச் (சுவிட்சர்லாந்து): கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகன் மெஸ்ஸி, சூப்பர் ஸ்டார் டீகோ மரடோனா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்தவர் என புகழப்படுபவர். சில சமயங்களில் மரடோனாவை விட மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் எனவும் அவர் புகழப்படுவதுண்டு.
இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற மெஸ்ஸி கடந்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்றில் சிலி அணியை எதிர்த்து விளையாடினார். அப்போது நடுவர் எமர்சன் அகஸ்டோவை அவமதிக்கும் வகையில் மெஸ்ஸி பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பிஃபா அமைப்பு மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மெஸ்ஸியின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.