June 27, 2017
tamil.samayam.com
தங்களை கொழுப்பு பிடித்தவர்கள் என கேலி செய்த அமைச்சரை, குரங்கு என சொல்லி பதிலடி கொடுத்து சிக்கலில் சிக்கியுள்ளார் மலிங்கா.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் இந்திய அணியை வீழ்த்தி பெருமைபாடிய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியிடம் படு தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இதனால் கடுப்பான இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா, அந்நாட்டு வீரர்களை கடுமையாக வசைபாடினார். குறிப்பாக அவர் கூறுகையில்,’ பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு உடலில் 16 சதவீதம் தான் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு 25 சதவீதம் உள்ளது. அதனால் எதிர்காலத்தில் 16 சதவீதத்துக்கு மேல் கொழுப்பு உள்ளவர்கள், இனி அணியில் கட்டாயம் சேர்க்கப்படமாட்டார்கள். ஐபிஎல்., போட்டிகளில் நான்கு ஓவர்கள் மட்டும் வீசவே பவுலர்கள் தகுதியுள்ளவர்களாக மாறிவருகின்றனர். இவர்களுக்கு தேசத்தைவிட ஐபிஎல்., மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாக உள்ளது.’ என்றார்.
இதற்கு தற்போது பதில் அளித்துள்ள இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா கூறுகையில்,’சும்மா சேரில் உட்கார்ந்து சீட்டை தேய்ப்பவர்கள் சொல்வதைப்பற்றி எனக்கு கவலையில்லை. கிளி வாழும் பொந்தில் என்ன உள்ளது என குரங்கிற்கு எப்படி தெரியும்?’ என்றார். இந்த கருத்தால், மலிங்கா அணியில் இருந்து நீக்கப்படலாம் என அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.