January 4, 2017 tamil.samaym.com
2013 ஸ்பாட் பிக்சிங் உட்பட பல வழக்களுக்காக பி.சி.சி.ஐ., நேரடியாக ரூ. 100 கோடிகளுக்கு செலவு செய்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) சீர்திருத்தம் செய்வது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை வழங்கியது. இதை நடைமுறைப்படுத்தாமல், பி.சி.சி.ஐ., காலக்கெடு நீட்டிக்கொண்டே இருந்தது. குறிப்பாக நிர்வாகிகளின் அதிகபட்ச வயது 70 ஆக குறைக்கப்பட வேண்டும், மாநிலத்துக்கு ஒரு ஓட்டு உள்ளிட்ட அம்சங்களுக்கு பி.சி.சி.ஐ., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த தவறிய பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜெய் ஷர்கே ஆகியோர் நீக்கப்பட்டனர்.
கடந்த 2013ல் நடந்த ஸ்பாட் பிக்சிங் உட்பட பல வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க பி.சி.சி.ஐ., ரூ. 100 கோடிக்கு மேல் செலவு செய்த விஷயம் தெரியவந்துள்ளது. இதில் இந்த வழக்குகளை சந்திக்க பி.சி.சி.ஐ., ஒருநாளைக்கு ரூ. 9 லட்சம் செலவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் பி.சி.சி.ஐ., சார்பில் வழக்குகளுக்கு ஆஜராக வக்கீல் ஷேகர் நாப்ஹாதே இரண்டு மாதங்களுக்கு மட்டும் ரூ. 1.3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
கடந்த 2013 முதல் பி.சி.சி.ஐ., சுமார் 91 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. ஸ்பாட்-பிக்சிங் வழக்கில், ஆய்வு செய்து உண்மைநிலையை சமர்பிக்க மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் சம்பளமாக விதிக்கப்பட்டது. சரியாக ஒரு ஆண்டுக்கு பின் அந்த விசாரணையின் முழு அறிக்கையை அந்த குழு நீதிமன்றத்தில் சமர்பித்தது.
தவிர, கடந்த 2015 வரைமட்டும் வழக்குகளுக்காக ரூ. 57 கோடியும், மார்ச் 2016 வரை மேலும் ரூ. 17 கோயும் வழக்குகளுக்காக பி.சி.சி.ஐ., செலவு செய்துள்ளது. தற்போது லோதா குழுவினருக்கு ரூ . 3.5 கோடிகளை வழக்கை சந்திக்க மட்டும் பி.சி.சி.ஐ., வாரி வழங்கியுள்ளது. இப்படி செலவு செய்த போதும், பண வல்லரசாக திகழும் பி.சி.சி.ஐ., சுப்ரீம் கோர்ட் இடம் இருந்து தப்பமுடியவில்லை.