June 10, 2019 தண்டோரா குழு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 19 ஆண்டுகளாக 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2007-08 காலகட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர்.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நான் விடை பெறுவதற்கு இது தான் சரியான தருணம் என்னுடைய பயணம் இனிமையாக முடிந்தது.ஒவ்வொரு ஆட்டத்திலும் என்னுடைய ரத்தத்தை சிந்தி விளையாடி இருக்கிறேன்.கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். கடுமையாகப் போராடினால் எந்த இலக்கையும் எட்டலாம் என்பதற்கு நான் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அணியில் இடம் பிடித்ததை சொல்லலாம்.இந்திய அணிக்காக 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.இந்திய அணியில் நான் விளையாடுவதற்கு என்னை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 2011 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாதது. 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட என்ன பெருமையிருக்கிறது?
கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவிகள் செய்வது என்னுடைய அடுத்த இலக்கு என உருக்கமாக கூறியுள்ளார்.
யுவராஜ் சிங் இந்தியாவிற்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கடைசியாக 2017-ம் ஆண்டு விளையாடினார். கடந்த 2000-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான யுவராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே 80 பந்துகளுக்கு 84 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.