October 16, 2019
தண்டோரா குழு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபி என மூன்று விதமான உலகக் கோப்பையை வென்று தந்தவர். உலகளவில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் சக வீரர்கள் மற்றும் மற்ற அணி வீரர்களிடமும் பொறுமையுடன் செயல்படக்கூடியவர். இதனாலேயே அவருக்கு கேப்டன் கூல் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைகாட்சிக்கு தோனி பேட்டியளித்துள்ளார்.அப்போது, மகேந்திர சிங் தோனியிடம் களத்தில் வீரர்கள் தங்களது உணர்வுகளை எப்படி கட்டுப்டுவத்துவது என்று உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி உங்களால் இதுப்போன்று செயல்பட முடிகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தோனி,
“களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும். நான் சமமான அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன். ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானது இல்லை. இந்த உணர்ச்சிகளை விட அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டியது என்பது முக்கியமானது. எனது உணர்ச்சிகளை மற்ற சில நபர்களை விட சற்று சிறப்பாக கட்டுப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்“ என்றார்.