March 30, 2019 தண்டோரா குழு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் வில்லே நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
12 வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், சிஎஸ்கே அணியில் காயத்தால் ஏற்கெனவே லுங்கி நிகிதி ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில், தற்போது மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் விலகியுள்ளார்.தனது மனைவிக்கு பிரசவ காலம் என்பதால் இந்த விலகல் முடிவை அவர் எடுத்துள்ளார்.
மேலும்,ஐபிஎல்லிலிருந்து விலகுவது என்பது மிகவும் கடினமான முடிவுதான் என்றாலும் இந்நேரத்தில் குடும்பத்துடன் தான் இருப்பதே சரியான முடிவாக இருக்கும் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டேவிட் வில்லேயும் விலகியிருப்பதால் தமது அணிக்கு மாற்று பந்துவீச்சாளரை உடனடியாக தேடும் நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.