April 4, 2019 தண்டோரா குழு
ஐபிஎல் போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.
12 வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னைசூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரு அணிக்கும் இடையிலான அனல் பறக்கும் போட்டியில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி வெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
அதாவது ஐபிஎல் போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை அணி தன்வசமாக்கியுள்ளது. மும்பை அணி 175 போட்டியில் 100 வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 75 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி சதவீதம் 56.85 ஆகும். மும்பை அணிக்கு அடுத்தப்படியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 93 ஆட்டத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தடை காரணமாக இரண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை.
3-வது இடத்தில் 88 வெற்றியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலா 79 வெற்றியுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. மேலும், ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிராக அதிகபட்சமாக 18 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தப்படியாக பெங்களூரை 15 ஆட்டத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.