August 7, 2021 தண்டோரா குழு
ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா, தனது சுற்றில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நிலையில், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார், மூன்றாவது சுற்றில் 76.79 மீட்டர் தூரத்துக்கும் எறிந்தார்.
தொடர்ந்து ஈட்டி எறிதலில் முதல் இரண்டு சுற்றுகளில் அதிக தூரம் ஈட்டி எறிந்து தொடர்ந்து தங்கப்பதக்கத்தை நோக்கி முன்னிலையில் இருந்த நீரஜ் ஜோப்ரா 6 சுற்றுகள் முடிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் தடகளப்போட்டியில் சுதந்திர இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நீரவ் சோப்ரா 100 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை செய்துள்ளார். 1920ல் பெல்ஜியத்தில் நடந்த ஒலிம்பிக்கில் பிரிட்டிஷ் இந்திய அணி தடகளத்தில் தங்கம் வென்றது. கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் அபினவ் பிந்த்ரா; 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நீரஜ் சோப்ரா !
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா.
ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்தவர். அவருக்கு தற்போது 23 வயது. பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை கொண்டிருந்திருக்கிறார் அவர். 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.