April 3, 2017
tamil.samayam.com
தோனி தலைமையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் என்று, அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதலாக, இந்திய அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி, மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கி, ஆடி வந்தது. இதன் உரிமையாளராக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உள்ளது.
தமிழக அளவில் பெரும் ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த கிரிக்கெட் அணி, ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தொடர்ச்சியாகப் பட்டம் வென்று, மற்ற ஐபிஎல் அணிகளை பயமுறுத்தியும் வந்தது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் தடை முடிந்தாலும், இதுவரையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.
இந்நிலையில், அதன் உரிமையாளரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன், சென்னையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ‘’2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்,’’ என்றார். மேலும், ‘’இந்த அணிக்கு, தோனியே கேப்டனாக இருப்பார்; அசுர பலத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடப் போவதை யாராலும் தடுக்க முடியாது,’’ என்றும் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.