April 12, 2019 தண்டோரா குழு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார்.முதல் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க ஆட்டம் எளிதானது. 3வது பந்தில் தோனி அவுட் ஆக ஆட்டம் பதட்டமானது. கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற போது, ஜடேஜாவின் இடுப்புக்கு மேலே பந்துவீசப்பட்டது.முதலில் கள நடுவர் கையை உயர்த்தினார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் அனுமதி மறுத்ததால் கள நடுவர் உல்லாஸ் கண்டேவும் நோபால் இல்லை என்றார்.இதனால் ஜடேஜா நடுவரிடம் முறையிட்டார். முடிவில் இது நோ பால் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி கோபத்துடன் மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.பின்னர் அவர்கள் மறுக்க கோபமாக வெளியேறினார். ஒருபந்தில் 3 ரன்கள் தேவை என்ற போது சாண்ட்னர் சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில்,பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.