February 8, 2019
தண்டோரா குழு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்து ஆணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டி கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான்-ரோகித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். தவானும் 30 ரன்களிலும், விஜய் சங்கர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. பின்னர் வந்த அனுபவ வீரர் தோனி-பண்ட் உடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் ஞாயிறன்று ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது.