March 27, 2018
tamilsamayam.com
கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்டை கையும் களவுமாக பிடிக்க காரணமாக இருந்தவர் டிவில்லியர்ஸ் என தெரியவந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் தெளிவாக தெரியவந்ததால் பூதாகரமானது. அதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இந்த திட்டத்தை வார்னர் கொடுத்ததாகவும், கேப்டன் ஸ்மித் ஏற்றுக்கொண்டு, பேன்கிராஃப்ட் திட்டத்தை முடிக்கும் நபராக இருந்ததாக ஒப்புக்கொண்டனர்.
கண்டுபிடித்த டிவில்லியர்ஸ் :
பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தப்படுத்துவதை தெளிவாக வீடியோ பிடித்து, தவறை கண்டுபிடிக்க டிவில்லியர் தான் காரணம் என கூறப்படுகிறது.
பொதுவாக புதிய பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக 30ஓவருக்கு மேல் ஆகுமாம். ஆனால் 25 ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்விங் ஆனதால், போட்டியை பார்த்துக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பெய்னி டிவில்லியர்ஸ் சந்தேகம் அடைந்தார்.
இதையடுத்து கேமராமேனிடம் கூறி ஆஸ்திரேலியர்கள் பந்தை ஸ்விங் செய்ய என்ன செய்கிறார்கள் என வீடியோ எடுக்க கூறியுள்ளார். தொடர்ந்து 26,27,28வது ஓவரை கண்காணித்ததில் பேன்கிராஃப்ட் பந்து சேதப்படுத்துவதை கட்சிதமாக வீடியோ பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், ஸ்மித் முதல் தடவை இப்படி நடந்துவிட்டது என கூறியதற்கு கடுப்பாகியுள்ளார்.
நீங்கள் இப்போது தான் முதல் தடவை தவறு செய்கிறீர்களா? நீங்கள் முன்பு இதுபோன்று பல முறை தவறு செய்ததை நான் காட்டவா? என கேட்டுள்ளார்.