September 10, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது, வீரர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து, மைதானத்தில் ஹெலிகாப்டரை இறக்கி வீரர்களை அந்நாட்டு ராணுவம் மீட்டது. கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு அந்நாட்டில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படவில்லை.எனினும் சில ஆண்டுகளாக ஜிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.ஆனாலும்,பெரிய அணிகள் அங்கு செல்ல இன்னும் தயாராக இல்லை.
இதற்கிடையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 19 வரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால் 10 இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டனர்.லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வேலா, குஷால் ஜானித் பெரேரா, தனஞ்சய் டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சய், ஏஞ்சலோ மேத்யூஸ், டன்னல் லக்மல், தினேஷ் சந்திமல் மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.