September 17, 2021 தண்டோரா குழு
18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டிருந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இந்நிலையில்,இன்று முதல் ஒருநாள் போட்டி துவங்க இருந்தது.ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது.
இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. நியூசிலாந்து அணி வீரர்களுக்கு தீவிரவாதிகளால் தாக்குதல் ஏற்படலாம் என நியூசிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று பாகிஸ்தானிலிருந்து புறப்படுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. கடைசி நேர விலகலால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.