January 3, 2017 விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, முதலில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்
பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில், ஏற்கனவே அறிவித்தது போல ஆஸ்திரேலிய அணியின் இளம் ஹில்டன் 450வது வீரராக களமிறங்கினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, ரென்ஷா, வார்னர் அசத்தல் துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக ஒருநாள் போட்டி போல விளையாடிய வார்னர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதல்நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டான் பிராட்மேனுக்கு பின், இந்த சாதனை படைத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார் வார்னர். தவிர சர்வதேச அரங்கில் டிரம்பர், மெக்கார்ட்னி, பிராட்மேன், மஜீத் கான் ஆகியோருக்கு பின், இந்த சாதனை படைத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.
தவிர ஆஸ்திரேலிய மண்ணில் இம்மைல்கல்லை எட்டிய முதல் வீரரானார் வார்னர்.
சர்ப்ராஜ் ‘100’:
உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, வார்னர் (113) வகாப் ரியாஸ் பந்தில், சர்ப்ராஜ் கையில் அகப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் சர்ப்ராஜ் அஹமது,100 விக்கெட் (88 கேட்ச், 17 ஸ்டெம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார். எதிர்முனையில் ரென்ஷா, அரைசதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்டநேர தேனீர் இடைவேளைக்கு முன், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ரென்ஷா (60), கவாஜா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.