August 28, 2017
tamil.oneindia.com
கிளாஸ்கோ: கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட இதே நேரத்தில், ரியோ ஒலிம்பிக், மகளிர் ஒற்றையர் பாட்மின்டன் போட்டியின் பைனலில், கடுமையாக போராடிய, பி.வி. சிந்து, வெள்ளி வென்றார்.
நேற்று இரவு நடந்த உலக சாம்பியன் போட்டியிலும், அதைவிட கடுமையாக போராடி, வெள்ளி வென்றார்.
ஒலிம்பிக் போட்டி முடிந்தபோது, நாட்டு மக்கள் மிகவும் பெருமை அடைந்தனர். சிந்துவைத் தவிர, மல்யுத்தத்தில் சாக் ஷி மாலிக் வெண்கலம் வென்றார். தடகளப் போட்டிகளில் தீபா கர்மேகர் அனைவரையும் அசத்தினார்.
பதக்கங்கள் வென்றதுடன், மிகவும் கடுமையாக போராடிய இந்த வீர மங்கையரை, நாடே கொண்டாடி வருகிறது.
தற்போது, உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டியிலும், நமது வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து பதக்கங்கள் வென்றதுடன், கடுமையான போராட்ட குணத்துடன் விளையாடி, அனைவருடைய பாராட்டையும் வென்றுள்ளனர்.
காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமாகாத நிலையிலும், சாய்னா நெய்வால், மிகச் சிறப்பாக விளையாடினார். அரை இறுதியில் ஜப்பானின் நசோமி ஓகுஹாராவிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார் சாய்னா.
நேற்று இரவு கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த போட்டியில், ஓகுஹாராவுக்கு கடும் சவால்விடுத்தார் சிந்து. கடைசியில் வெள்ளி வென்றார். முதல் முறையாக, உலக சாம்பியன் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை சாய்னாவும், சிந்துவும் வென்று தந்துள்ளனர்.
பதக்கங்கள் வென்றதைவிட, மைதானத்தில் அவர்கள் காட்டிய வேகம், கடுமையாக போராடும் குணம், ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் பைனலில், இங்கிலாந்திடம் தோற்றாலும், கேப்டன் மிதாலி ராஜ் அணி காட்டிய அதே போராடும் குணத்தை, நேற்றைய போட்டியிலும் பார்க்க முடிந்தது. இதுவரை கிரிக்கெட்டை மட்டுமே பார்த்து வந்த மக்களை, மற்ற விளையாட்டுகளிலும், குறிப்பாக பெண்கள் விளையாடும் போட்டிகளையும் பார்க்க தூண்டியதே, இவர்களுடைய மிகப் பெரிய சாதனையாகும்.
பாட்மின்டன் போட்டிகளில், 2011 முதல் உலகின் மிக உயரிய போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து வருகிறது. 2011ல் உலக சாம்பியன் போட்டியில், ஜூவாலா கட்டா – அஸ்வினி போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றனர். 2012ல் சாய்னா நெய்வால், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2013, 2014ல், உலக சாம்பியன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்.
2015ல் உலக சாம்பியன் போட்டியில் சாய்னா நெய்வால் வெள்ளி வென்றார். 2016ல் பி.வி. சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார். தற்போது நடந்த உலக சாம்பியன் போட்டியில், சிந்து வெள்ளியும், சாய்னா வெண்கலமும் வென்றனர்.
இந்த அனைத்து பதக்கங்களையும் நமது வீராங்கனைகள் வென்று தந்து, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுடைய போராட்ட குணம், அடுத்த தலைமுறையினருக்கு மிகச்சிறந்த பாடமாகும்.