October 31, 2019 தண்டோரா குழு
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வேல். 31 வயதாகும் மேக்ஸ்வெல் நல்ல சுழற்பந்துவீச்சாளரும், நல்ல பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இதுவரை 110 ஒருநாள் போட்டிகள், 61 டி20 போட்டிகள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை மேக்ஸ்வெல் தலா ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். டி20 போட்டியில் 3 சதங்களை விளாசியுள்ளார்.
தற்போது இவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், மேக்ஸ்வேல் சில மன ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் விலகி ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மேக்ஸ்வேலுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல் விலகியதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக டாசி ஷார்ட் மாற்று வீரராக பங்கேற்கவுள்ளார்.