January 26, 2019
தண்டோரா குழு
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டவாது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் இன்று நடந்தது. இதில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்தது. தோனி (48), ஜாதவ் (22) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பவுல்ட், பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர், 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 40.2 ஓவரில்234 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 18வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். அப்போது அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ராஸ் டெய்லர் முன்னால் வந்து விளையாட முயன்றார்.ஆனால், பந்து பேட்டில் படாமல் தோனி கைக்கு சென்றது. உடனே பந்தை பிடித்த தோனி, கண்ணிமைக்கும் நேரத்திலும் எளிதில் ஸ்டம்பிங் செய்து நியூசிலாந்து வீரர்களை மிரள வைத்தார். இதில் ஆச்சரியமே வெறும் 0.08 நொடிகளில் இந்த ஸ்டம்பிங்கை செய்துள்ளார் தோனி. கள நடுவரே சற்று நேரம் ஆச்சரியப்பட்டு அவுட்டா? இல்லையா? என்ற முடிவை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். பின்னர் மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.
ஓடுவதில் மட்டுமல்ல ஸ்டம்பிங் செய்வதிலும் தோனி சிறுத்தை வேகத்தில் செயல்படுகிறார் என்பதை இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் தோனியை பாராட்டி வருகின்றனர்.