October 3, 2019 தண்டோரா குழு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது.தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நேற்று துவங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (115), மயங்க் அகர்வால் (84) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 176(244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். சேதேஷ்வர் புஜாரா (6), விராட் கோலி (20), அஜின்கியா ரஹானே (15), ஹனுமா விஹாரி (10), விருத்திமான் சஹா (21) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் மறுபுறம் அதிரடியாகவும், நிதானமாகவும் ஆடி இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் மாயங்க் அகர்வால் இது தான் இவரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டியின் ரன்கள் ஆகும். அவர் 215 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா 30 ரன்னும், அஷ்வின் 1 ரன்னும் எடுத்திருந்த போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிக்ளர் செய்வதாக அறிவித்தார். 7 விக்கெட் இழப்பிருக்கு 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது.இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.