January 18, 2019
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை சமன் செய்து டெஸ்ட் தொடரை வென்றது. இதனையடுத்து, இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
இதையடுத்து, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று
நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் இந்திய அணியில் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் சஹால் சேர்க்கப்பட்டனர். ஆரம்பத்தில் இருந்தே போட்டியில் இந்திய அணி இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சஹால் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 59 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது. பின்னர் வந்த கோலி நிதானமாக ஆடி 46 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த தோனி – ஜாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். தோனி அவுட்டாகாமல் 87 ரன்கள் எடுத்தார். இது இந்தத் தொடரில் தோனி அடிக்கும் மூன்றாவது அரைசதமாகும். ஜாதவ் 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 49.2ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.